வீட்டு மனையாகும் விளை நிலங்கள் நீர் பாய்ச்ச வழியின்றி குறையும் சாகுபடி
ராஜபாளையம் : ராஜபாளையம் தாலுகா நன்செய் விவசாய நிலங்களை பலரும் பிளாட்டுக்களாக மாற்றி விற்பனை செய்வதால் மீதம் உள்ள சாகுபடி பரப்பு நீர் பாசனத்திற்கு வழியின்றி பாதிக்கப்படுகிறது. ராஜபாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளதால் கண்மாய் பாசனம் மூலம் நெல் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. தற்போது ராஜபாளையம் அருகே நான்குவழிச் சாலை, புது பஸ் ஸ்டாண்ட் எதிரே இணைப்பு சாலை என பணிகள் விவசாய பகுதிகள் இடையே நடந்து வருவதால் விளை நிலங்களுக்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் என்று இருந்த உள்பகுதி பாசன பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு 3 கோடிக்கு மேல் ஆகிறது. இதனால் ரோட்டில் ஒட்டியுள்ள விளைநிலங்கள் நில புரோக்கர்களால் பிளாட்டுகளாக மாறிவருகின்றன. நன்செய் நிலங்களை விற்க தடை இருப்பதை ஐந்து ஆண்டுகளாக தரிசாக வைத்தோ வருவாய்த் துறையினருடன் கூட்டு சேர்ந்தோ மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இதன் அடுத்த பகுதியில் உள்ள விவசாய சாகுபடியில் உள்ளவர்கள் வாய்க்கால் தடை ஏற்பட்டு தண்ணீர் பாய்ச்ச வழியின்றி ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் விற்பனைக்கு ஆசை காட்டி குறி வைக்கப்படுகின்றனர். ராஜபாளையம் புளியங்குளம், கடம்பன்குளம், புதுக்குளம், சேத்துார் வாழவந்தான் குளம், தேவதானம் வாண்டையார் குளம் உள்ளிட்ட கண்மாய் பாசன பரப்பு அளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாரம்பரிய விவசாயத்தில் உள்ளவர்களுக்கு தடை ஏற்படுத்துவர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.