குடிநீர் பணிகளுக்கு பணம் வழங்க தாமதம் கிடப்பில் போடப்பட்ட பணிகள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கிராமங்களில் குடிநீர் பணிகளை செய்து முடித்து பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டதால் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்கள் உடைந்து குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதை சரி செய்ய 2 லட்சத்திற்கு மேல் நிதி தேவைப்படுகிறது. ஆனால் ஊராட்சி மூலம் 5 ஆயிரத்திற்கு உட்பட்ட பணிகளைத்தான் செய்ய அனுமதி உள்ளது. இதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகள் இணை இயக்குனர் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டியுள்ளது. லட்சக்கணக்கில் நிதி வரும் போது, ஊராட்சிகளின் இணை இயக்குனர் அனுமதி பெற வேண்டி உள்ளது. இதனால் அத்தியாவசிய குடிநீர் பணிகள் செய்ய முடியாமல் பல கிராமங்களில் குடிநீர் தடை ஏற்பட்டுள்ளது. பெரிய வள்ளி குளம் கிராமத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டி போர்வெல் அமைக்க பணம் வழங்காததால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. செம்பட்டியில் 2 மாதமாக குடிநீர் மோட்டார் பழுது பணம் இல்லாமல் கிடப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பணிகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரூ.3 லட்சம் வரை உடனடியாக செலவு செய்வதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே குடிநீர் பிரச்சனையின்றி கிடைக்கும்.