உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காற்றால் சீசன் இருந்தும் மல்லிகை வரத்து குறைவு விலையும் மலிவு

காற்றால் சீசன் இருந்தும் மல்லிகை வரத்து குறைவு விலையும் மலிவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மல்லிகைப்பூ விளைச்சல் சீசன் இருந்தும் அதிக காற்று அடிப்பதால் வரத்து குறைந்து விலையும் மலிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பாலையம்பட்டி, தொட்டியாங்குளம், செம்பட்டி, குலசேகர நல்லூர், தமிழ்பாடி, மடத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை பூ விவசாயம் பாரம்பரியமாக நடக்கிறது.இந்த பகுதியில் உள்ள செம்மண்ணில் விளையும் மல்லிகை பூ பருமனாகவும் அதிக மணத்துடன் இருப்பதால் அருப்புக்கோட்டை மல்லிகைக்கு தனி கிராக்கி உள்ளது. சென்ட் தயாரிக்க ஏற்றதாக இருப்பதால் அருப்புக்கோட்டை மல்லிகையை அதிக அளவில் வாங்கிச் செல்வர்.தற்போது மல்லிகை சீசனாக இருப்பதால் பூக்கள் அதிகளவில் விளையும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், காற்று பலமாக வீசுவதால் பூ வரத்து குறைவாக உள்ளது. மொட்டுக்கள் உதிர்ந்து விடுகிறது. சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் 3 டன் மல்லிகை பூ விற்பனை ஆகும். தற்போது வரத்து குறைவாக இருப்பதால் ஒரு டன் அளவில் தான் பூக்கள் வருகிறது. சென்ட் தயாரிக்கும் வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவிற்கு ரூ.250 நிர்ணயம் செய்கின்றனர். வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது.இது குறித்து செம்பட்டி விவசாயி கிருஷ்ணமூர்த்தி: மல்லிகை விவசாயம் தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். தற்போது சீசன் இருந்தாலும் பலத்த காற்றுக்கு பூ விளைச்சல் குறைவாகத்தான் கிடைக்கிறது. விலையும் குறைவாக உள்ளது. பயிர் மேலாண்மை செய்யவும், பூக்களை பறிக்கவும் அதிகம் செலவு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு விலை கட்டுபடியாகவில்லை. அரசு மல்லிகை பூ விவசாயிகளின் நலன் கருதி விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை