மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
24-Nov-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் வரும் நிலையில் திருச்செந்தூர், பழனி போல் இக்கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பக்தர்கள் எதிர் பார்க்கின்றனர். தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பழநி தண்டாயுதபாணி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்களுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர். அவர்களின் பசியை போக்கும் வகையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது இக்கோயிலில் மதியம் நேரம் மட்டுமே 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோருக்கு அன்னதானம் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வரும்போது ஹோட்டல்களில் சாப்பிட வேண்டுமானால் ரூ. ஆயிரத்திற்கு மேல் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, திருச்செந்தூர், பழனி, மதுரை, ராமேஸ்வரம் கோயில்கள் போல் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை துவக்கி காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அன்னதானம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Nov-2025