தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி. ரூ.48 லட்சத்தில் பிரமடை ஓடை புனரமைக்கும் பணி துவக்கம்
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள பிரமடை ஓடை தூர் வார தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து ரூ. 48 லட்சம் நிதியில் புனரமைக்கப்படும் பணி நடந்து வருகிறது.அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான பிரமடை ஓடை திருச்சுழி ரோடு அருகில் உள்ளது. முன்பு, இதில் மழைநீர் நிறைந்து கோயிலின் தெப்பத்தில் வந்து சேரும்.நாளடைவில் ஓடை பராமரிப்பு இன்றி கழிவு நீர் சேர்ந்தும், முட்புதர்கள் வளர்த்தும், குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தியாக வெளியானது.இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் ஓடையை தூர் வாரி பராமரிக்க இந்து சமய அறநிலைய துறையிடம் அனுமதி பெற்றது. பின் ரூ. 48 லட்சம் நிதியை ஒதுக்கி, ஓடையை சுற்றி கரை கட்டி, பென்சிங் அமைத்து, பூக் கற்களால் நடைபாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி: பிரமடை ஓடையை நகராட்சி நிதி மூலம் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையை சுற்றி நடைபாதை அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மக்கள் வாக்கிங் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளது. ஓடையில் சுத்தமான மழை நீர் மட்டும் சேரும் வகையில் பணி செய்யப்படுகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.