வ.புதுப்பட்டி-மதுரைக்கு நேரடி பஸ்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா புதுப்பட்டியில் இருந்து மதுரைக்கு பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுப்பட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக தினமும் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், மதுரை, தேனி போன்ற பல்வேறு நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்துாருக்கு இயங்கி வந்த அரசு, தனியார் பஸ்கள் சில சரியான நேரங்களில் புதுப்பட்டி ஊருக்குள் வந்து செல்வதில்லை. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை புதுப்பட்டியில் இருந்து மதுரைக்கு நேரடியாக தனியார் பஸ்கள் இயங்கி வந்தது. தற்போது இந்த பஸ்களும் இயங்குவதில்லை. மதுரைக்கு செல்ல அரசு பஸ்களும் இல்லை. இதனால் கிருஷ்ணன் கோவில் சென்று செங்கோட்டை, ராஜபாளையத்தில் இருந்து வரும் பஸ்களில் தான் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைக்கு புதுப்பட்டி மக்கள் ஆளாகி வருகின்றனர்.எனவே, தற்போது வத்திராயிருப்பில் அரசு பஸ் டெப்போ செயல்பாட்டில் உள்ள நிலையில் இங்கிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் புதுப்பட்டி ஊருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.