சரியான நேரத்திற்கு இயங்காத இலவச பஸ்களால்...அதிருப்தி:டிரிப்புகள் கட், வழித்தட மாற்றங்களால் அவதி
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் சரியான நேரத்திற்கு இயங்காமலும், அடிக்கடி டிரிப்புகள் கட் செய்யப்படுவதாலும், வழித்தடம் மாற்றம் போன்ற காரணங்களாலும் சிரமத்திற்கு ஆளாகும் பெண்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி நகரங்களில் அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் உள்ளன. இவற்றின் கீழ் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளின் கீழ் உள்ள கிராமங்களுக்கு தினமும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் துவங்கும் முன்பு வரை முறையாகவும், சரியான நேரத்திற்கும் இயங்கி வந்த டவுன் பஸ்கள், திட்டம் துவங்கிய பிறகு சரியான நேரத்தில் புறப்படுவதில்லை. மதிய உணவு நேர இடைவேளை மற்றும் டிரைவர், கண்டக்டர்கள் பணி மாற்றத்தின் போதும், மதியம் 1:00 மணிக்கு மேல் 3:00 மணி வரை இயங்க வேண்டிய பஸ்கள் சரியான நேரத்தில் இயங்குவதில்லை. காலை, மாலை வேலை நேரங்களில் பஸ் ஸ்டாண்டுகளிலேயே பஸ்கள் நிரம்பும் பட்சத்தில் வழித்தட ஸ்டாப்பில் நின்று பெண்களை ஏற்றி இறக்கி செல்வதிலும் அலட்சியம் காட்டுகின்றனர். சில சமயங்களில் ஸ்டாப்புகளை கடந்தும் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பெண்கள் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 2 நேரங்கள் மட்டுமே இயங்கும் ஒரு சில வழித்தட பஸ்களும் கோவில் திருவிழா நேரங்களில் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. சில டவுன் பஸ்கள் வருவாய்க்காக வழித்தடம் மாற்றியும் இயக்கப்படுகிறது. இதனால் பெண் பயணிகள் அரசு பஸ்களின் செயல்பாட்டின் மீது அதிருப்தி அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சதுரகிரியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பிளவக்கல் அணைக்கு இயங்க வேண்டிய பஸ், தாணிப்பாறைக்கு இயக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதியம் 2:00 மணிக்கு சுந்தரபாண்டியம் செல்ல வேண்டிய பஸ், தற்போது வேறு வழித்தடத்தில் இயங்குகிறது. மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்கள் நேர் வழியாகவும், பல நேரங்களில் மம்சாபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கீழ பொட்டல்பட்டி கிராமத்தை டச் செய்து பெருமாள் தேவன்பட்டி வழியாக செல்லும், டவுன் பஸ் அடிக்கடி நேர்வழியில் சென்று விடுகிறது. மேலும் வெளியூர்களுக்கு இயங்கும் மொபசல் பஸ்களும் அடிக்கடி டவுன் பஸ்களாக இயக்கப்படுவதால், அவை இலவச பஸ்களாக என்பதை கண்டறிய முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர். இந்த நிலை மாவட்டத்தின் ஒவ்வொரு டிப்போவிலும் காணப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் சரியான நேரத்தில் இயங்கவும், வழித்தடம் மாற்றங்கள் செய்யாமலும், பெண்கள் நம்பிக்கையுடன் பயணம் மேற்கொள்வதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.