அகழி அருகே கட்டப்பட்டுள்ள சுவரால் தொடர்ந்து உட்புகும் யானைகள்
சேத்துார்: சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி ஒட்டிய விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சேதம் ஏற்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. அகழி அருகே தனியாரால் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் அருகே யானை புகுவதால் விவசாயிகள் கட்டுப்படுத்த எதிர்பார்க்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய வனப்பகுதியிலிருந்து விவசாய விளை நிலங்களுக்குள் யானைகள் உட்புகுந்து சேதப்படுத்துவது கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதையும், ஆபத்தை எதிர்கொள்வதை தடுக்கும் விதமாக மலையடிவார பகுதிகளில் அகழிகள் அமைக்கப்பட்டது.ராஜபாளையம் அடுத்த சேத்துார் குளிராட்டி பீட் முதல் பிராவடி பீட் வரை 5 கி.மீ., துாரத்திற்கு 2 மீட்டர் அகலம், 3 மீட்டர் ஆழத்தில் அகழி அமைக்கப்பட்டது. இவற்றில் சில இடங்களில் பட்டா நிலம் என வனத்துறை இடையே வழக்கு உள்ளது. இந்நிலையில் பிராவடி பீட் செல்லப்பிள்ளை ஊரணி அருகே அகழியை ஒட்டி தனியார் இடத்தில் உயரமாக சுற்றுச்சுவர் கட்டபட்டுள்ளதால் ஒட்டிய பகுதியை யானைகள் எளிதாக கடந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி இரவில் வனப்பகுதிக்கு திரும்பி விடுகிறது.செல்லப்பிள்ளை ஊரணி கிழக்கு பகுதி சண்டாள ஊரணி மேற்கு பகுதி இடையே நேற்று முன்தினம் தென்னை மரங்களின் குருத்துகளை பிய்த்தும், வேரோடு சாய்த்தும், மா மர கிளைகளை ஒடித்து, வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் யானை உட்புகும் பாதையை கண்டறிந்து வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்