ஸ்ரீவில்லிபுத்துார்- செண்பகத்தோப்பு ரோட்டில் நடமாடும் யானைகள்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மலையடிவார தோப்புகளில் இதுவரை நடமாடி வந்த யானைகள் தற்போது அதனையும் கடந்து நகருக்குள் வரும் ரோடுகளில் நடமாடி வருவதால் விவசாயிகள் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக மம்சாபுரம் செண்பகத்தோப்பு மலை அடிவாரத்தோப்புகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதில் அவ்வப்போது பல்வேறு தோப்புகளில் மா, தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இரவு காவலுக்கு செல்லும் விவசாயிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.இந்நிலையில் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். ஆனாலும்,யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லவில்லை.கடந்த சில நாட்களாக செண்பகத் தோப்பு மலை அடிவார பகுதிகளையும் கடந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் வள்ளலார் இல்லம் வரை சர்வசாதாரணமாக யானையில் வந்து செல்வதாகவும், இதேபோல் திருவண்ணாமலை பந்த பாறை பகுதியிலும் மாலை நேரங்களில் நடமாடி வந்த யானை தற்போது அதனையும் கடந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதற்கு வனத்துறை நிரந்தர தீர்வு காணவில்லையெனில் நகருக்குள் யானைகள் புகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.