விவசாய நிலங்கள், பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வழியில் பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
சிவகாசி; சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் பட்டாசு ஆலைகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் ஓடையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே இங்கு பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் கிழக்குப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் மக்காச்சோளம், நெல் உள்ளிட்டவைகள் பயிரிடுகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகள், விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் ஆலமரத்துப்பட்டி கண்மாயிலிருந்து வாடியூர் கண்மாய்க்கு செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.மேலும் பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் ஆலைகளுக்கு விடுமுறை விடப்படுகின்றது. தொழிலாளர்கள் வருமானத்தை இழக்கின்றனர். அறுவடை காலங்களில் பயிர்களை அறுவடை செய்வதற்கு செல்ல முடியவில்லை. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டை சீரமைப்பதோடு ஓடையில் பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.