வீணாகும் விவசாய உலர்களங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு: ரோட்டில் காய வைப்பதால் விபத்து அபாயம்
மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம் மட்டுமின்றி கண்மாய் பாசனம் மூலம் பல்வேறு கிராமங்களில் நெல், எள், கரும்பு, சோளம், பாசிப்பயறு உளுந்து மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.மானாவாரி விவசாயத்திலும் விருதுநகர் மாவட்டம் முதன்மை பெற்ற மாவட்டமாக உள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் விளைவிக்கப்படும் பயிர்களை உலர்த்துவதற்காக விவசாயக்களங்கள் அமைக்கப்பட்டன.இவற்றில் விளைவித்த பயிரை கொட்டி மாடுகள் பூட்டியும், டிராக்டர்களை ஓட்டியும் பயிர்களை பிரித்து விவசாயிகள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றனர். காலப்போக்கில் ஊராட்சி பகுதியில் இருந்த விவசாய களங்களின் சிமென்ட் தளம் சேதமடைந்து இடிந்து போயின. இவற்றில் தற்போது முள் செடிகள் முளைத்து புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது.இதனால் கிராமங்களில் விளைவித்த பயிர்களை விவசாயிகள் ரோடுகளில் பரப்பி வருகின்றனர். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பயிர்கள் மீது ஏறிச் செல்லும் போது கம்பு சோளம் மக்காச்சோளம் எள்போன்ற தானியங்களை பிரிக்கின்றனர். கம்பு சோளம் உளுந்து போன்ற பயிர்களை ரோட்டில் போட்டு உலர்த்துவதன் மூலம் இவ்வழியாக வேகமாக செல்லும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் சறுக்கி விடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.மேலும் பயிர்களின் உலர்ந்த சறுகுகள், குச்சிகள் வாகனங்களில் டயர்களை குத்திகிழித்து விடுவதால் வாகனங்கள் பஞ்சர் ஆகி பழுதாகும் நிலை உள்ளது. பஸ் லாரி போன்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்று விடும் நிலையில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் கார்கள் மற்றும் சிறிய ரக வேன்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.ஊராட்சிகளில் சேதம் அடைந்த நிலையில் உள்ள விவசாயக் களங்களை புனரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் ரோடுகள் விவசாய களங்களாக மாறுவது குறையும்.வாகன ஓட்டிகளும் நிம்மதியாக பயணம் செய்வர். எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகள் தோறும் புதர் மண்டி சேதமடைந்த நிலையில் உள்ள விவசாயக்களங்களை கண்டறிந்து தேவையான நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும்.