உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆனைகுட்டம் அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனைகுட்டம் அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிவகாசி : சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது.இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை. மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை.இதற்கு 9 மதகுகளிலும் ஷட்டர் பழுது காரணமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைந்து முடித்து ஷட்டர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்நிலையில் அணையில் பெரும்பான்மையான பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் வந்தாலும் விரைவில் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது.இதனால் ஷட்டர் அமைத்தாலும் விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ