சாத்துாரில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு கிடைக்காமல் அவதி
சாத்துார்; சாத்துாரில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்திய மக்காச் சோளம் பயிருக்கு வனத்துறை இழப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்துார் வெங்கடாசலபுரம், படந்தால், மேட்டமலை, வடமலாபுரம், ஊஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.பயிர் காய் காய்க்கும் பருவத்தில் காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை மேய்ந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வனத்துறையினர் காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இழப்பீடு தொகை கிடைக்காமல் வியாபாரி விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து வெங்கடாசலபுரம் விவசாயி தமிழ்ச்செல்வன் கூறியதாவது: மக்காச்சோள பயிர்களை காட்டு பன்றிகள் மேய்ந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. சேதத்திற்கு ஏற்றார்போல் ஏக்கருக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை இழப்பீடு வழங்குவதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்றுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இதனால் மானாவாரி மக்காச்சோள விவசாயிகள் அடுத்து பயிர் செய்ய போதுமான நிதி வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். வனத்துறையினர் விரைந்து இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.