உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாய பணிகளில் விவசாயிகளுக்கு நஷ்டம்

விவசாய பணிகளில் விவசாயிகளுக்கு நஷ்டம்

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் பெரும்பாலும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்மாய் பாசனம் மூலம் நெல், வாழை,கரும்பு, மிளகாய் வத்தல் , மக்காச்சோளம் , கேழ்வரகு, பாசிப்பயறு, தட்டாம் பயறு, உளுந்தம் பயறு உள்ளிட்ட பயறு வகைகளையும் சிறுதானியங்களையும் விவசாயிகள் விளைவித்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் அதிகளவு முள்ச் செடிகள் முளைத்துள்ளன. இந்த முள் செடிகளில் காட்டு விலங்குகளான மான்கள், முயல்கள் அதிகமான அளவில் தஞ்சம் புகுந்து வளர்ந்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தப்பி வந்த மான்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பாலவநத்தம் , சாத்துார் பனையடிப்பட்டி வல்லம்பட்டி ,நல்லான் செட்டிபட்டி ,அணைக்கரைப்பட்டி, வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உலா வருகின்றன.மழை மிகவும் குறைவாக பெய்யும் நிலையில் மானாவாரி நிலத்தில் பயிர் செய்யப்படும் சிறு தானிய பயிர்களையும் கண்மாய் பாசனம் மூலம் விளையும் நெல் போன்ற பயிர்களையும் மேலும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை இரவு நேரத்தில் முயல்கள் மான்கள் காட்டுப் பன்றிகள் என வன விலங்குகள் புகுந்து வேட்டையாடி தின்று வருகின்றன.கடன் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் காட்டு விலங்குகள் படையெடுப்பால் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனவிலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படும் போது வனத்துறையினர் குறிப்பிட்ட ஒரு தொகையை இழப்பீடாக வழங்கி வருகிறது. இந்த இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை.மேலும் உரிய காலகட்டத்தில் இழப்பீடு தொகை கிடைக்காததால் பல விவசாயிகள் மனவிரக்தி அடைந்து தங்கள் நிலத்தில் பயிர்கள் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகிறது.விவசாயப் பணிகள் பாதிப்பு காரணமாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது. காட்டு விலங்குகள் காரணமாக தங்கள் நிலங்களில் பயிர்கள் செய்யவில்லை என விவசாயிகள் பலரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.ஒரு சிலர் இரவு முழுவதும் வயல்வெளியில் காவல் காத்து காட்டு விலங்குகளிலிருந்து தங்கள் பயிரை பாதுகாத்து வருகின்றனர் இதனால் துாக்கம் இன்றி விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது. விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வராமல் பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை