உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்

தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்

சிவகாசி: பாதுகாப்பு பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு நவ. 10 முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மேலாளர், போர்மென் மற்றும் தொழிலாளருக்கு வேதிப்பொருள் கலவை(மிக்சிங்), மருந்து செலுத்துதல் (பில்லிங்), மணி மருந்து உற்பத்தி, வெடிபொருள் பாதுகாப்பு விதிகள், வெடி பொருட்களை பாதுகாப்பாக கையாளுதல், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் சுற்று பயிற்சி வகுப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பயிற்சிக்கு தொழிலாளர்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு நவ. 10 முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பயிற்சி வகுப்பு சிவகாசி அருகே ஆனையூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ் பெறாத பட்டாசு ஆலைகள், ரூ.5 ஆயிரம் அபராத தொகையை இணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சிவகாசி, என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம், என இணை இயக்குநர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி