சாத்துாரில் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 1, காயம் 6
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். ஆறு பேர் காயமடைந்தனர்.திருத்தங்கலை சேர்ந்த சகோதரர்கள் காமராஜ், கணேசன். இவர்களுக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை கீழத்தாயில்பட்டியில் உள்ளது.இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன. 6 மாதங்களுக்கு முன் விதிமீறல் காரணமாக இந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமம் புதுப்பிக்கப்பட்டு இரு மாதங்களாக பட்டாசு தயாரித்து வருகின்றனர்.பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை பணிகள் செய்யக்கூடாது ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதும் பணியில் வட மாநில தொழிலாளர்களும் உள்ளூர் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். காலை 8:00 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் பணி துவங்கியது.பேன்சி ரக பட்டாசுக்கான மணி மருந்து கலவை தயார் செய்யும் பணியில் திருத்தங்கலை சேர்ந்த பால குருசாமி 49, ஈடுபட்டார். ஏற்கனவே மிச்சம் வைத்திருந்த மணி மருந்து நீர்த்துப்போய் இருந்த நிலையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார். ஆலையில் இருந்த 16 அறைகளுக்கும் தீ பரவி, 8 அறைகள் தரைமட்டமாகின. சாத்துார், வெம்பக்கோட்டை, சிவகாசி பகுதி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். விபத்தில் வெடித்து சிதறிய செங்கற்கள் தாக்கியதில் படந்தாலை சேர்ந்த ராஜபாண்டி, காளிமுத்து, தாயில்பட்டியைச் சேர்ந்த கண்ணன், ராஜசேகர், வட மாநில தொழிலாளர்கள் காமேஷ் ராம், ராகேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.கரும்புகையை சுவாசித்ததால் ராஜசேகர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலையின் போர்மேன் லோகநாதனிடம் வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
18 கி.மீ., துாரம் கேட்ட வெடிச்சத்தம்
n சாத்துார் கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையின் வெடிச்சத்தம் 18 கி.மீ., துாரத்திற்கு கேட்டது.n காலை 6:30 மணிக்கு முதல் வெடிச்சத்தமும், 8:30 மணிக்கு நான்காவது வெடிச்சத்தமும் பூமி அதிரும்படியில் இருந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.n ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து விபத்தில் சிக்குவதை தடுத்தனர்.n அறைகளை குத்தகைக்கு விட்டு வேலையை செய்ய வைப்பதால் ஞாயிற்றுக்கிழமையிலும் பணியாளர்கள் வேலைக்கு வந்துள்ளனர்.n பட்டாசு ஆலைகளின் அருகிலேயே வீடு பிடித்து தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் இரவு, பகல் பாராது எந்நேரமும் வேலை செய்ய தயாராக இருப்பதால் அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்கள் நேரம் காலம் அறியாமல் வேலை வாங்கி வருகின்றனர். பயிற்சி இன்றி வட மாநில தொழிலாளர்கள் மணி மருந்து கலவை செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.