உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்டேஷன் பெயிலில் விடப்படும் கஞ்சா வியாபாரிகள் திருந்தவே மாட்டாங்க: வெளியில் வந்தவுடன் மீண்டும் தொடரும் விற்பனை

ஸ்டேஷன் பெயிலில் விடப்படும் கஞ்சா வியாபாரிகள் திருந்தவே மாட்டாங்க: வெளியில் வந்தவுடன் மீண்டும் தொடரும் விற்பனை

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முழு அளவில் தடுக்கும் வகையில் ஒவ்வொரு காவல் துணை கோட்டத்திலும் தினமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதிகளவு விற்பனை செய்பவர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை உட்படுத்தி சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர்.ஆனாலும் ஒவ்வொரு தாலுகாவிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் 10 கிராம் 20 கிராம் பொட்டலங்களாக விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகும் நிலை காணப்படுகிறது.மேலும் ஒவ்வொரு காவல் துணைக்கோட்டத்திலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கிராமப்புறங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவது குறைந்து வருகிறது.ஆனாலும் போலீசாரின் கண்காணிப்புகளையும் மீறி கொண்டு வரப்படும் கஞ்சாக்களை சிறுசிறு பொட்டலாங்களாக்கி விற்பனை செய்வதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், முதியோர்களும் பெண்களும் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.இருந்தபோதிலும் அவர்களையும் கண்காணித்து கைது செய்யும் போலீசார் அவர்களின் உடல்நிலையை கருதி உடனடியாக ஸ்டேஷன் பெயிலில் விட்டு விடுகின்றனர். இதனால் சில நாட்களில் மீண்டும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்படும் எண்ணிக்கை தான் அதிகரிக்கிறதே தவிர கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.எனவே, கஞ்சா விற்பனையில் கைது செய்யப்படுபவர்கள் உடனடி ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்படுவதை தவிர்த்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைப்படுத்தினால் மட்டுமே கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என்பதை விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ