கண்களுக்கு பசுமை, மனதிற்கு இனிமை; சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில்
மரங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்களும் அடர்ந்த காடுகளும் சுவாசத்திற்கு உதவுவதால் மரக்கன்றுகள் நடுவது அவசியம். மரங்கள் நமக்கு நிழல் அளிப்பதுடன், இதமான காற்றினையும் அளிக்கிறது. மரங்களினால், மனிதருக்கு பல்வேறு பயன்கள் கிடைத்து வருகின்றன. இயற்கையின் கொடை போன்று ரோட்டின் இரு புறமும் வளர்ந்து நிற்கும் மரங்களால், வெயிலின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும்.நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம். நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நுரையீரலை பாதுகாப்பது நமது கடமை. அந்த வகையில், நம்மை நாம் காத்துக் கொள்ள, மரங்களை காப்பாற்ற வேண்டும். மரம், மண் என அனைத்தும், நம்மில் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் இருந்தால், மரம் வளர்ப்பதில் தானாக ஆர்வம் வந்துவிடும்.அந்த வகையில் நகரை பசுமையாக்குவதற்காக சிவகாசி பி.எஸ்.ஆர்.. பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ஏராளமான மரங்கள் வளர்த்து பாதுகாக்கின்றனர். கல்லுாரியின் தாளாளர் மரங்களுக்கும் இயற்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். இங்கு உங்கள் மகிழம்பூ பன்னீர் வாகை உள்ளிட்ட 50 வகையான பல்வேறு மரங்கள் வளர்க்கப்படுகின்றது. 217 மூலிகைச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. தவிர வளாகம் முழுவதுமே பசுமை புல் வெளி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கொய்யா தோட்டம், எலுமிச்சங்காய் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பல்வேறு வகையான பூச்செடிகளும் நடப்பட்டுள்ளது. இவைகளை பராமரிப்பதற்கு என்றே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இக்கல்லுாரிக்குள் நுழைந்தாலே குளுகுளுவென உள்ளது. வெயிலே தெரியாத அளவிற்கு மரங்கள் அடர்ந்து எங்கும் பசுமையாக காட்சியளிக்கிறது. படிப்பதற்கு ஏற்ற இயற்கை சூழல் உள்ளது. இங்குள்ள மரங்களால் அவ்வப்போது கல்லுாரி தாகத்திற்குள் மட்டுமே மழை பெய்வது கூடுதல் சிறப்பு.