தேவதானம் எஸ்டேட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் தந்தை, மகன், பேரன் உட்பட ஐந்து பேர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்
சேத்துார்:விருதுநகர் மாவட்டம் தேவதானம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏலக்காய் எஸ்டேட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் சாராய ஊறல் வைத்திருந்த தந்தை ,மகன் ,பேரன் உட்பட 5 பேரை வனத்துறையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜபாளையம் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் சூரியன் கல் எஸ்டேட் உள்ளது. இங்கு ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமண பொருட்கள் சாகுபடி நடக்கிறது. தேவதானத்தை சேர்ந்த கடற்கரை 60, குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த எஸ்டேட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு விலங்குகளை வேட்டையாட பயன்படும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும், சாராய ஊறலும் வைத்திருந்தனர்.இதையடுத்து கடற்கரை, அவரது மகன்கள் சண்முகராஜ் 40, செல்வகுமார் 23, சண்முகராஜ் மகனான 17 வயது சிறுவன், வாட்ச்மேன் தேனி மாவட்டம் ஆனைமலையான் பட்டியை சேர்ந்த ஊமைத்துரை 55, ஆகியோரை பிடித்தனர். 2 நாட்டு துப்பாக்கிகள் , 5 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் புகாரில் சேத்துார் போலீசார் சண்முகராஜ் ,செல்வகுமார் ,ஊமைத்துரை , 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கடற்கரையை கள்ளச்சாராய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வேங்கை, தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.