சாத்துாரில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்சார கம்பி
சாத்துார்: சாத்துார் மெயின்ரோட்டில் கிருஷ்ணன் கோயில் அருகில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு உயரழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சாத்துார் கிருஷ்ணன்கோயில் அருகில் உள்ள பங்களா தெருவில் இருந்து வைப்பாற்றில் உள்ள நகராட்சி உரை கிணற்றுக்கு உயர் அழுத்த மின்சார கம்பி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இந்த உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்தது. அறுந்த உயரழுத்த மின்சார கம்பி கேபிள் டிவி ஒயரில் சிக்கி பாதி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த லோடு வேனை ஓட்டி வந்த ஜான் பாட்சா அவ்வழியாக வந்த மக்களை எச்சரித்ததோடு போலீசுக்கு, மின் வாரியத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவ்வழியாக மக்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர்.இந்த சமயத்தில் பங்களா தெருவில் உள்ள பொது நுாலகம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் தீ பொறி கிளம்பி பட்டாசு போல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. நேற்று மதியம் 1:30 மணி வரை மின்சாரவாரிய பணியாளர்கள் பணி செய்து மின்சார கம்பியையும் டிரான்ஸ்பார்மரையும் சீரமைத்தனர்.