தமிழகத்தில் காவல்துறையினரின் அணுகுமுறை சரியில்லை ஹிந்து முன்னணி துணைத்தலைவர் தகவல்
ஸ்ரீவில்லிபுத்துார்: ''தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஒரு சில இடங்களில் காவல்துறையினரின் அணுகுமுறை சரியில்லாததால் பிரச்னை ஏற்படுகிறது,'' என, ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் கூறினார். நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ், பொருளாளர் வினோத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை நேற்று காலை மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடந்தது. ஒரு சில இடங்களில் காவல்துறை அணுகுமுறை சரியாக இல்லாததால் பிரச்னை வருகிறது. அதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவம் ஒரு உதாரணம். சிவகாசி டி.எஸ்.பி., பாஸ்கர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதனை கண்டித்து செப்., 2ல் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும். எந்த முஸ்லிமும் பள்ளிவாசல் வழியாக செல்லக்கூடாது. மேளம் அடிக்க கூடாது என கூறவில்லை. ஆனாலும் போலீசார் கெடுபிடியாக நடந்துள்ளனர். அவர்கள் மீது ஹிந்து முன்னணி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும். ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம். காவல்துறை எங்கள் விரோதி அல்ல. ராணுவமும், காவல் துறையும் நாட்டின் இரு கண்கள். ஆனால் காவல்துறை ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து செயல்படக் கூடாது. ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பேசுபவர்கள் மீது தமிழக காவல்துறை சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை ஹிந்துக்களுக்கு இன்று வரை சுதந்திரம் கிடையாது என்றார்.