| ADDED : ஜன 24, 2024 05:02 AM
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள ஓடைகளில் நேரடியாக மனிதக் கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.சாத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் ஊரின் நடுவில் ஓடைகள் பல செல்கின்றன. ஊரின் நடுவில் உள்ள ஓடைகளுக்கு அருகில் குடியிருப்பு வீடுகள் வணிக வளாகங்கள் தனியார் மருத்துவமனைகளும் கட்டப்பட்டு உள்ளன.இதுபோன்ற வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனை கட்டடங்கள் குடியிருப்பு பகுதிகள் அருகில் உள்ள ஓடைகளில் நேரடியாக மனிதக்கழிவுகள் கலந்து வருகின்றன.செப்டிக் டேங்க் கட்டி அதில் கழிவுகளை சேகரித்து பின்னர் கழிவு நீரேற்றும் வாகனங்கள் மூலம் அகற்ற வேண்டும். ஆனால் செலவை தவிர்ப்பதற்காக ஓடைகளில் செப்டிக் டேங்க் கட்டி சிலரும் கட்டாமலேயே குழாய் மூலம் மனிதக் கழிவுகள் நேரடியாக கலக்கும்படியும் குழாய் அமைத்து உள்ளனர்.இதனால் நகர் பகுதியில் உள்ள ஓடைகள் சாக்கடை வாறுகால் போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் இந்தகழிவுகள் மொத்தமாக அடித்து வரப்பட்டு இவை கண்மாய் குளங்கள் ஆறுகளில் சேரும் நிலை உள்ளது.சுத்திகரிக்கப்படாத இந்த கழிவு நீரால் பாசி படர்வதும், ஆகாயத்தாமரை ஏற்படுவதும் அதிகமாக உள்ளது. இதில் ஆடு மாடு போன்ற கால்நடைகளை குளிப்பாட்டுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு இறக்கும் நிலை உள்ளது. நகராட்சிகள் ஓடைகளில் மனிதக்கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.