முறையாக நடக்காத குப்பை சேகரிக்கும் பணி விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் தனியார் மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை ,என நகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. விருதுநகர் நகராட்சிகூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. பொறியாளர் எட்வின்பிரைட்ஜோஸ், துணைத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலையரசன் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் ரோட்டில் வெளியேறுவதால் சுகாதாரகேடு ஏற் படுகிறது. ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்): பாதாளச்சாக்கடையில் மண் அள்ளும் இயந்திரம், ஆட்கள் இல்லை. குப்பை அகற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது அடிக்கடி கலெக்டர் அலுவலகம், மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுகின்றனர். வெங்கடேஷ் (அ.தி.மு.க.,): இதற்கு முன்பு நடந்த வார்டு சபா கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்கள் மீது இதுவரை எதற்காக நடடிக்கை எடுக்கவில்லை. முத்துலட்சுமி (சுயே): புதிய ரேசன் கடை கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்தேன். வார்டு சபா கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. நகராட்சி தலைவர் மாதவன்: வார்டு சபைக் கூட்டத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் கேட்கும் போது அனுப்பாமல் இருக்க முடியவில்லை. புதிய அடைப்பு நீக்கும் வாகனம் வந்தவுடன் சரிசெய்யப்படும். புதிய கமிஷனர் வந்ததும் மண் அள்ளும் இயந்திரம், ஆட்கள் நியமிப்பது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும். உமாராணி (தி.மு.க.,): நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி புகார் மனு அளித்தால், அதை நகரமைப்புதுறைக்கு அனுப்பாமல் எதற்காக வருவாய் துறைக்கு அனுப்புகின்றனர். ஆறுமுகம் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியை துவங்க வேண்டும். ரம்யா (காங்.,): தனியார் மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை. தள்ளுவண்டியில் குப்பை சேகரிப்பதால் தொய்வு ஏற்பட்டு சுகாதாரகேடு உருவாகியுள்ளது. மின்சார வாகனங்களில் குப்பை சேகரிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.