உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமப்புற மாணவர்களை மேம்படுத்த திருச்சுழியில் தேவை அறிவுசார் மையம்

கிராமப்புற மாணவர்களை மேம்படுத்த திருச்சுழியில் தேவை அறிவுசார் மையம்

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு கொள்ள பயிற்சி எடுக்கும் விதமாக அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமத்து மாணவர்கள் உயர் கல்வி படிப்பிற்கு அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்கின்றனர். தற்போது தான் திருச்சுழியில் அரசு கலைக்கல்லுாரி திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்கள் பெரும்பாலோர் அரசு, தனியார் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு கொள்ள ஆர்வம் இருந்தாலும் அதற்கான பயிற்சி பெற அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர் பகுதிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது.ஏழை, விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களாக இருப்பதால் பயிற்சி கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த வசதி இல்லாததால், போட்டி தேர்வுகளுக்கு தேவையான பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்தவுடன் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விவசாயமோ அல்லது கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். படித்த படிப்பு வீணாவதுடன் அவர்களின் எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.வருங்கால கிராமத்து மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு திருச்சுழி பகுதியில் அறிவுசார் மையம், நூலகம் அமைக்க வேண்டும். அரசு நகர் புறப்பகுதிகளில் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்ளும் வகையில் அனைத்து வகையான புத்தகங்கள், ஆன்லைனில் பயிற்சி எடுப்பதற்குரிய வசதிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்து தருகிறது. இதேபோன்று கிராமத்து மாணவர்களின் நலன் கருதி திருச்சுழியில் நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை