| ADDED : பிப் 08, 2024 06:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து யானை கல் சிலைகள், கொடி மரங்கள் மாயமானது குறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள் கோயில் ஊழியர்களிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.இக்கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில், 2 புகார்கள் கொடுத்திருந்தார். அதில் கோவில் கல்யாண மண்டப மணமேடைப் படிகளில் இருபுறமும் இருந்த இரண்டு கல் யானை சிலைகள் சட்ட விரோதமாக அகற்றப்பட்டது. அதன் நிலை குறித்து விசாரிக்கவும்,மற்றொரு புகாரில் ஆண்டாள், வடபத்திர சயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் இருந்த கொடி மரங்கள் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் கோயிலில் இருந்த இரண்டு கொடி மரங்கள் சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரசாத கடை ஏலம் எடுத்து நடத்தி வந்த ராமரிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்..இதுகுறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சில நாட்களுக்கு முன் ஆண்டாள் கோயிலில் விசாரித்தனர். இந்நிலையில் புகார் தொடர்பான விசாரணைக்கு, நேற்று காலை மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் நேரில் ஆஜராகுமாறு கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, சில பட்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அவர்களிடம் நேற்று மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.