சட்ட விரோத மின் வேலியை கண்டறிவது அவசியம்! ஆய்வுக்கு சிறப்பு குழு அமைக்க கோரிக்கை
சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத மின் வேலிகளை கண்டறிந்து அகற்ற ஆய்வுக்கு சிறப்பு குழு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் சாத்துார் வல்லம்பட்டியில் குல்லுார் சந்தையைச் சேர்ந்த சுரேஷ் 45, தொம்பக்குளத்தை சேர்ந்த ரவிக்குமார் 47, சுரேஷ் குமார் 45, வேப்பிலைப்பட்டியில் அனுமதி இன்றி விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பலியாகினர். வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தான் சோலார் மின்வேலி அமைக்கப்படுகிறது. இதற்கு வேளாண் துறை மின் மானியம் வழங்குகிறது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வத்திராயிருப்பு, அய்யனார்கோவில், செண்கபத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அனுமதி பெற்றே அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் குறைந்த அளவிலான மின்னதிர்வு ஏற்படுத்தும் வகையில் தான் வைக்க வேண்டும். ஆனால் பலர் அரசு அனுமதியின்றி நேரடி மின்சாரம் மூலம் சட்ட விரோத மின் வேலிகள் அமைக்கின்றனர். இது போன்று நேரடி மின் வேலி அமைப்பதால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகிறது. வருவாய்த் துறை அலுவலர்கள், வேளாண் துறை, வனத்துறையினர், மின் துறையினர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து அனுமதி இன்றி அமைக்கப்படும் மின்வேலிகளை கண்டறிந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் பலர் அதிகரித்து வரும் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டி மின்வேலி அமைக்கின்றனர். இவ்வாறு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை கண்டறிந்தால் மக்கள் மின்துறையிலும், போலீஸ்சிலும் புகார் அளிக்கலாம். இது ஒரு கிரிமினல் குற்றம். மாவட்டத்தில் கட்டுப்பன்றியை சுடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் சோலார் மின் வேலி பயனாளிகளின் எண்ணிக்கயை அதிகரிக்க வேண்டும். நேரடி மின்வேலிகள் அமைப்பதை கண்காணிப்பதும், அதற்கான கட்டுமான பொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் உரிய உரிமம் பெற்று செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நேரடி மின்சாரம் மூலம் வைக்கப்பட்ட வேலிகளில் அதீத மின்துாண்டல் ஏற்படுத்த செய்து பாதிப்பை ஏற்படுத்துகுின்றனர். மழை நேரங்களில் இது இன்னும் அதிகமாக விவசாயிகளை காவு வாங்குகிறது. எனவே வருவாய்த்துறை அலுவலர்கள், வனத்துறையினர், மின் துறையினர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து அனுமதி இன்றி அமைக்கப்படும் மின்வேலிகளை அகற்ற வேண்டும்.