கண்மாயில் கழிவு நீர் கலப்பு--
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே வாகைகுளம் கன்மாயில் தொடர்ந்து குடியிருப்பு, தொழிற்சாலை கழிவுகள் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சத்திரப்பட்டி ஊராட்சி எதிரே அமைந்துள்ளது வாகைகுளம் கண்மாய். 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கண்மாயை நம்பி நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பருத்தி என நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கிராம குடியிருப்புகளில் இருந்து நேரடியாக கழிவு நீரை கண்மாய்களில் கலந்து விடுவதுடன், இங்கு செயல்படும் ஆலைகளின் கழிவுகளும் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் சாக்கடையில் கலந்து கண்மாயில் விடப்படுகிறது.இதனால் கண்மாயின் நீரின் தன்மை மாறி உள்ளது உடன் பிளாஸ்டிக் கழிவுகளாக குவிந்து காணப்படுகிறது. இது தவிர சுற்றியுள்ள வணிக நிறுவனங்களின் குப்பை, மாமிச கழிவுகளும் ஆளில்லாத நேரம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.இதன் காரணமாக இப்பகுதியை சுற்றி உள்ள விளைநிலங்களின் சாகுபடி பயிர்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.