தி.மு.க., கூட்டணியின் எண்ணம் சட்டசபை தேர்தலில் பலிக்காது சொல்கிறார் கிருஷ்ணசாமி
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: கிராமங்களில் மக்கள் குடிப்பதற்கு குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என எப்படி ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். நல்லாட்சி எனக்கூறி எப்படி ஓட்டு கேட்டு வர முடியும். நுாறு நாள் வேலை திட்டத்தில் மறைமுகமாக மோசடி நடக்கிறது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். கோபுரக் கலசம் நன்றாக இருந்தாலும் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலை போல் தான் தி.மு.க., ஆட்சி உள்ளது. அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களை சென்றடையவில்லை. இதனால் மிகப்பெரிய கொந்தளிப்பு மக்களிடம் உள்ளது. அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி எண்ணம் பலிக்காது. தமிழக மக்கள் நலனுக்காக, முன்னேற்றத்திற்காக நல்ல கூட்டணி அமையும். அதில் புதிய தமிழகம் பங்கேற்கும். வெறும் எம்.எல்.ஏ., சீட்டுகளுக்காக அல்ல. ஆட்சி அதிகாரத்தில் பங்கு எடுத்தால் தான் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும். ஜனவரியில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். 2021 தேர்தலுடன் ஒரு கட்சி ஆட்சியும் முடிந்து விட்டது. இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். 75, 50, 40 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய கட்சிகள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை கண்டு பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் தான் அவர்கள் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்றார்.