| ADDED : ஜூலை 15, 2024 05:35 AM
மாவட்டத்தில் 450 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை ஒரு வி.ஏ.ஓ., நிர்வகித்து வருகிறார். அந்தந்த ஊராட்சிகளில் தங்கி ஆண், பெண் வி.ஏ.ஓ.,க்கள் பணியாற்றி வருகின்றனர்.கிராமங்களை உள்ளடக்கிய அனைத்து கிராம கணக்குகள், இருப்பிடம், நில சம்மந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு தினமும் வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் இருந்து பணி செய்வதை கடமையாக கொண்டுள்ளனர். இது தவிர முதியோர் உதவி தொகைக்கு கள ஆய்வு, விவசாய பாதிப்புகளை பார்வையிட நேரில் செல்கின்றனர்.பல்வேறு பணிச்சுமைகளை ஏற்று பணியாற்றி வரும் வி.ஏ.ஓ., களின் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. பெண் வி.ஏ.ஓ. கள் பணி புரியும் இடங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் அவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக இருந்து வருகிறது.இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள நகர்ப்பகுதிக்கு சென்று வர வேண்டி உள்ளது. பெரும்பாலானன கிராமங்களில் சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டும் அவை சரியாக பயன்பாட்டில் இல்லை. கதவுகள் உடைந்து பராமரிப்பின்றி உள்ளன. காலை பணிக்கு வந்த பின் 3 முதல் 5 மணி நேரம் வரை கிராமங்களிலே இருக்க வேண்டியிருப்பதால் இயற்கை உபாதையை கழிக்க வழியின்றி உடல் உபாதைகளையும் சந்திக்கின்றனர்.இதற்கு பயந்து கொண்டு பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் கிராமப்புறங்களுக்கு செல்ல தயக்கம் காட்டி முக்கிய ஊர்களில் அறை எடுத்து பணி செய்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. வி.ஏ.ஓ., அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் தலையாய கடமையாக உள்ளது. இதில் சில அலுவலகங்களுக்கு சுகாதார வளாகம் கட்ட அனுமதி கிடைத்தும் பணிகளை துவங்காமல் உள்ளனர்.தற்போது தமிழக அளவில் ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கழிப்பறை வசதிகளை செய்து தர நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் விரைந்து பணிகளை துவங்க வேண்டும்.