பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கல் சிவகாசிக்கு வியாபாரிகள் வருகை அதிகரிப்பு
சிவகாசி: தமிழக முழுவதும் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கிய நிலையில் சிவகாசிக்கு பட்டாசு வாங்க சிறு, பெரிய வியாபாரிகள் வரத் துவங்கியதால் பட்டாசு வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விருதுநகர், சிவகாசி சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2500 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகின்றது. வெளிமாநில வியாபாரிகள் நேரடியாக பட்டாசு ஆலைகளுக்கே சென்று ஆர்டர் கொடுப்பர். அந்த வகையில் வெளி மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறு, பெரிய பட்டாசு வியாபாரிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து பட்டாசு கடைகள், பட்டாசு ஏஜென்ட்களிடம் ஆர்டர் கொடுப்பர். ஆனால் இரு வாரத்திற்கு முன்பு வரை வெளி மாவட்டங்களில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்காததால் வியாபாரிகள் பட்டாசு வாங்க வரவில்லை.தற்போது தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான மாவட்டங்களில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் பட்டாசு வாங்க ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சேவுகன், பட்டாசு வியாபாரி, சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் டல் அடித்தது. பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ளது இதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். இந்த ஆண்டும் பட்டாசு வியாபாரம் சிறப்பாக உள்ளது, என்றார்.