வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் குவியும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள்
விருதுநகர்:விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை வளாகத்திற்குள் துாக்கி எறிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் தற்போது கலெக்டர் அலுவலக பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரு பக்க சர்வீஸ் ரோடுகளும் இரு வழிப்பாதைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பணி நடப்பதில் ஒரு பகுதி மட்டும் கடப்பதற்காக பணி செய்யாமல் விடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் எதிரே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதன் பக்கவாட்டில் டீக்கடைகள், ஓட்டல்கள், ஜெராக்ஸ் கடைகள் இருக்கும். மனு எழுத வருவோர் இங்கு வருவர். இரவு நேரங்களில் இப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இருக்காது. வட்டார போக்குவரத்து வளாக சுற்றுச்சுவரின் ஓரங்களில் இருளான இடங்களை தேடிப்பிடித்து அங்கு அமர்ந்து குடித்து விட்டு மதுபாட்டில்களை வளாகத்திற்குள் வீசிச் செல்கினறனர் குடிமகன்கள்.இந்த வழியாக தான் கூரைக்குண்டு பகுதி மக்கள் தங் கள் வீட்டிற்கு செல்வர். குடிமகன்களால் பாதிப்பில்லை என்றாலும், இரவு நேரங்களில் இருளிடங்களில் இது போன்று குடிப்பது அவ்வழியாக செல்வோருக்கு பயத்தை ஏற்படுத்ததான் செய்யும். சூலக்கரை போலீசார் இப்பகுதியில் குடிக்க அனுமதிக்கக் கூடாது. வளாக சுற்றுச்சுவரில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அகற்ற வேண்டும்.