பிரதான ஓடைகள் ஆக்கிரமிப்பு கண்மாய்களுக்கு மழைநீர் செல்வதில் சிக்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகரில் உள்ள பிரதான ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைப்பட்டு போனதால் கண்மாய்களுக்கு மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையில் பெரிய கண்மாய், தும்பை குளம் கண்மாய், செவல் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் உள்ளன. ஒவ்வொரு கண்மாய்க்கும் நகரில் இருந்து மழை நீர்வரத்து ஓடைகள் வழியாக மழைநீர் செல்லும். பல ஆண்டுகளாக ஓடைகளை பராமரிக்காமல் விட்டதால் ஓடைகள் சேதம் அடைந்தும் பல பகுதிகளில் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் போனதால் கண்மாய்களுக்கு மழை நீர் வரத்து குறைந்து போனது. கழிவுநீர் தான் கண்மாயில் சேர்கிறது. புளியம்பட்டியில் உள்ள செவல் கண்மாய்க்கு செல்லும் பிரதான ஓடை பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பந்தல்குடி ரோட்டில் இருந்து பெரிய கண்மாய்க்கு செல்லும் மழை நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் குறுகியும் பல இடங்களில் அடைபட்டும் மழைநீர் செல்வதில்லை.கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தும்பை குளம் கண்மாய்க்கு செல்லும் மழைநீர் வரத்து கால்வாயில் பழைய கட்டடக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இந்த கால்வாயின் மறுபகுதியில் கடைக்கு பாதை அமைப்பதற்காக கட்டிடக்கழிவுகளை கொட்டியும் ஓடையில் குழாய்களை பதித்து மேல் பகுதியை அடைத்து விட்டனர். இதனால் மழைக்காலத்தில் வெள்ளம் முழு அளவில் கண்மாய்க்கு செல்ல வழி இல்லாமல் உள்ளது.இதேபோன்று நகரில் பல பிரதான ஓடைகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்தும் காணாமல் போய்விட்டன. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து கண்மாய்களுக்கு செல்லும் பிரதான ஓடைகளை மழைக்காலத்திற்கு முன் துார்வாரி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.