| ADDED : டிச 13, 2025 06:04 AM
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் மல்லாங்கிணர் ரோட்டில் இருபுறமும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. விருதுநகர் அருகே பாண்டியன் நகர் ரோசல்பட்டி ஊராட்சியில் இருந்தாலும் நகர் பகுதிக்கு அருகே இருப்பதால் குடியிருப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகராட்சியில் உள்ள கடை களின் எண்ணிக்கை போல மல்லாங்கிணர் ரோட்டில் இருபுறமும் கடைகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஆனால் பெரும் பாலானவர்கள் தங்களின் கடைகளுக்கு முன்னால் உள்ள இடத்தில் தகர செட் அமைத்து ரோடு வரை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் மாநில நெடுஞ்சாலை ரோடான இடத்தில் இருபுறமும் மண் நிறைந்து இருப்பதால் ரோடு குறுகிய நிலையில் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் பாண்டியன் நகர் ரோட்டை கடந்து வாகனங்களில் செல்வது சிரமமான ஒன்றாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய ரோடாக இருந்தும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையே உள்ளது. பாண்டியன் நகரில் ரோட்டில் இருபுறமும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சர்வசாதாரணமாக நடக்கும் ஆக்கிரமிப்பு களை மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். பாதசாரிகள் நடமாட சிரமப்படுகின்றனர். புதிய புதிய கடைகள் முளைத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வழியில் ஆன்மிகத் தலங்கள் உள்ளதால் வழிபாடுகளின் போது நடக்க முடியாத நிலையும் ஏற்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்தால் இதற்கு நிரந்த தீர்வு ஏற்படும். எனவே பாண்டியன் நகர் ரோட்டில் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதசாரிகள் ரோட்டில் தான் நடக்கிறோம் பன்னீர்செல்வம், சுய தொழில், விருதுநகர்: பாதசாரிகள் ரோட்டிகள் தான் நடக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நடப்பவர்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்பவர்கள் அதிகம் இந்த ரோட்டை பயன் படுத்துகின்றனர். இதனால் அந்நேரங்களில் பெரும் கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமப் படுகின்றனர். சிரமத்தில் வாகனங்கள் பொன்ராஜ், தனியார் ஊழியர், விருதுநகர்: இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருவதை தடுக்க வேண்டும். கடைகள் ஆக்கிரமிப்பதை தாண்டி தள்ளுவண்டிகளும் ஆக்கிர மிக்கின்றன. சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லவும் சிரமப் படுகின்றன. எனவே ரோட்டின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தீர்வு இரு வழிச்சாலை மாற்றவும் பாண்டியன் நகர் ரோடு மல்லாங்கிணருக்கு செல்லும் மாநில நெடுஞ் சாலைத்துறையின் முக்கியமான ரோடாகும். இந்த ரோட்டில் தற்போது கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரோட்டை விரிவுப்படுத்தினால் ஆக்கிரமிப்புகள் தானாக அகன்று விடும். இருவழி நெடுஞ்சாலையாக மாற்றினால் மக்களும் பயன்பெறுவர். மேலும் இப் பகுதியை நகராட்சியோடு இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் ஆக்கிரமிப்பு அகற்ற பணிகளை துரிதப்படுத்த முடியும். நகரமைப்பையும் திட்ட மிட்டு செயல்படுத்த முடியும்.