சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் இருபுறமும் குவிந்து வரும் மணல் தடுமாறும் வாகன ஓட்டிகள்
சிவகாசி, சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருபுறமும் மணல் கொட்டிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்கு வழியின்றி தடுமாறுகின்றனர். சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவ. 11 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் ஓரத்தில் மூன்றடி அகலத்திற்கு மணல் கொட்டி கிடக்கின்றது. இதில் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. டூவீலர், சைக்கிள்களில் வருபவர்கள் பெரிதும் தடுமாறுகின்றனர். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அதிகமான வாகனங்கள் வந்து கொண்டே இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தில் ஆக்கிரமித்துள்ள மணலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். இதேபோல் நகரில் போக்குவரத்து நிறைந்த முக்கியப் பகுதிகளான பைபாஸ் ரோடு, சாத்துார் ரோடு, விளாம்பட்டி ரோடு, திருத்தங்கல் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள மணல்களையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.