தேசிய நெடுஞ்சாலை மாற்றுப்பாதை தாமதத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ராஜபாளையம்: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மாற்றுப்பாதையான டி.பி.மில்ஸ் ரோட்டில் சாலை பெயர்க்கப்பட்டு ஒரு மாதம் கடந்தும் பணிகள் தொடங்காததால் வாகன ஓட்டிகள் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகர் பகுதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சு மார்க்கெட்டில் இருந்து சங்கரன்கோவில் முக்கு வழியாக திருநெல்வேலி தென்காசி ரோட்டிற்கு இணைப்பு உள்ளது.ரோட்டின் மூலம் நகர்ப்பகுதியில் ஏற்படும் நெரிசல் குறைக்கும் வகையில் கனரக வாகனங்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. டி.பி மில்ஸ் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன், பள்ளிகள், ஸ்பின்னிங் மில்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளதால் மக்கள் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது.இந்நிலையில் இந்த சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தை சந்தித்து வந்தது. இதனால் நேரு சிலை முதல் ரயில்வே மேம்பாலம் வரை 2.37 கி.மீ., வரை ரூ.3.05 கோடி நிதி ஒதுக்கி ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இதை அடுத்து சாலையில் மில்லிங் மூலம் பழைய ரோட்டின் மேற்பகுதி பெயர்த்து பணிகள் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் அடுத்த கட்டத்திற்கு செல்லாததால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள்: தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதுடன் தனியார் அலைபேசி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் ஒயர் பதிக்கும் பணிகள் தொடங்கி தாமதமாகிறது. விரைவில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.