திடீர் பணியிட மாற்றத்தால் நகராட்சி அதிகாரிகள் அதிருப்தி
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றி வரும் கமிஷனர்கள், பில் கலெக்டர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் திடீர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 9 மாநகராட்சிகள், 140க்கும் மேற்பட்ட நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. நகராட்சி கமிஷனர் தலைமையில் மேலாளர், செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் என பல நிலைகளில் ஏராளமான அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது பல நகராட்சி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நகராட்சி கமிஷனர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பு 92 பில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது பல நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஏப்ரல், மே மாதங்களில் தான் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் திடீரென கமிஷனர்கள், பில் கலெக்டர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உட்பட பலர், தொலைதுார நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் மீது அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.