உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / என்.சி.சி.எப்., ஏஜன்சி கொள்முதல் செய்ய எதிர்ப்பு அரசு நிலையங்களை விரைந்து திறக்க எதிர்பார்ப்பு

என்.சி.சி.எப்., ஏஜன்சி கொள்முதல் செய்ய எதிர்ப்பு அரசு நிலையங்களை விரைந்து திறக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: மாவட்டத்தில் மத்திய அரசின் என்.சி.சி.எப்., ஏஜன்சியின் கொள்முதல் வேண்டாம் என்றும், அரசு கொள்முதல் நிலையங்களை விரைந்து திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 40 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்தாண்டும் 40 கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு தேசிய கூட்டுறவு நுகர்வோர் பெடரேஷனுக்கு தமிழகத்தில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய 2024 ஜூலை 31ல் அனுமதி கொடுத்துள்ளது.இதன் படி தேசிய கூட்டுறவு நுகர்வோர் பெடரேஷன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஒரு 'இன்டர்மீடியேட்டரி ஏஜன்சியை' நியமனம் செய்தது.இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உரம், இடுபொருட்கள் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, மழை வெள்ள பாதிப்புகள் தாங்கி நெல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு அரசின் நேரடி கொள்முதல் ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும்.இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்சிகள் கொள்ளை அடிப்பதை தடுக்கவே அரசு நேரடி கொள்முதல் துவக்கப்பட்டது.தற்போது மீண்டும் தனியார் ஏஜன்சியிடம் கொள்முதல் ஒப்படைக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் இப்போது கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் நெல் அறுவடை முடிந்து தயார் நிலையில் உள்ளன.மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் என்.சி.சி.எப்.,ன் ஏஜன்சியின் தனியார் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற மாநில அரசின் நிர்பந்தம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தயங்கி வருகிறது. வேளாண் இணை இயக்குனர் கருத்துருப்படி ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி ஆகும் சூழ்நிலையில் மாநிலத்தில் என்.சி.சி.எப்., நிறுவனத்தின் நேரடி கொள்முதலுக்கு டெல்டா மாவட்டங்களில் விலக்கு அளிக்கப்படுவது போல் விருதுநகர் மாவட்டத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா கூறியதாவது: திருநெல்வேலியில் என்.சி.சி.எப்., கொள்முதல் நிலையம் திறந்ததில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் நம் மாவட்டத்திற்கு கொள்முதல் செய்ய என்.சி.சி.எப்., தனியே அனுமதி கோராமல் உள்ளது. இந்த சூழலில் கடந்த ஆண்டு செயல்படுத்தியதை போன்று செயல்படுத்த ஏன் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது, என்றார்.விவசாயி சிவசாமி கூறியதாவது: மத்திய அரசின் விலை ரூ.23 உடன் மாநில அரசு ரூ.1.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி ரூ.24.50க்கு வாங்கும் சூழலில் என்.சி.சி.எப்., வாங்கும் போது மத்திய அரசின் விலையிலே வாங்கும் வாய்ப்பு உள்ளது. விலையில் மாறுதல் ஏற்படுவதால் தகராறு ஏற்படும் சூழல் உள்ளது, என்றார்.மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் முடிவு எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி