உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் இல்லை, ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ., நடை; அவதியில் அரியனேந்தல் குடியிருப்போர்

குடிநீர் இல்லை, ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ., நடை; அவதியில் அரியனேந்தல் குடியிருப்போர்

காரியாபட்டி; குடிநீர் சப்ளை இல்லாதது, மழை காலத்தில் மழைநீர் செல்ல வழி இன்றி தேங்கி, வீடுகளுக்கு செல்ல முடியாதது, பஸ் நிறுத்தம் இல்லாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தி நடக்க விடுவது உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணங்களால் காரியாபட்டி அரியநேந்தல் குடியிருப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரியனேந்தல் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சத்தியா, லட்சுமி, சுந்தரியம்மாள், லதா, மாரியம்மாள், இருளாயி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் குடிநீர் வினியோகம் இல்லை. உப்புத் தண்ணீர் மட்டுமே சப்ளை ஆகிறது. இவற்றைக் குளிக்க கூட பயன்படுத்த முடியாது. எங்கள் ஊரை ஒட்டி செல்லும் தாமிரபரணி குடிநீர் குழாயிலிருந்து சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற வழியின்றி வீடுகளை சுற்றியே தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது.பேவர் பிளாக், சிமின்ட் ரோடு வசதி கிடையாது. மழை நேரங்களில் மழை நீர் தேங்கி வெளியேற வழி இன்றி சேறும் சகதியுமாக இருக்கும். வீதிகளுக்குள் சீமைக் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடக்கிறது. விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் நடமாட அச்சமாக உள்ளது. பஸ் நிறுத்தம் கிடையாது. 3 கி.மீ., தூரம் உள்ள பாப்பனம் விலக்கில் பஸ்சை நிறுத்துகின்றனர். பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் அங்கிருந்து நடந்து வர சிரமப்படுகின்றனர். மாணவிகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மயான வசதி இல்லை. இறப்பு சமயத்தில் எங்கு கொண்டு செல்வது என்கிற பிரச்னை எழுகிறது. ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் உள்ள எஸ்.கல்லுப்பட்டிக்கு செல்ல வேண்டும். தேதி குறிப்பிடும் போது தான் பொருட்கள் வாங்க முடிகிறது. அதுவரை காத்திருக்க வேண்டும். பொங்கலுக்கு வழங்க வேண்டிய தொகுப்பை இதுவரை வழங்கவில்லை. சுகாதார வளாகம் வசதி கிடையாது. திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இனியும், அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால் நாங்களும் ஊரை காலி செய்வதை தவிர வேறு வழி இல்லை. அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !