அரசு மருத்துவமனையில் நிரந்தர ஆர்.எம்.ஓ., நியமனம் இல்லை கலந்தாய்வில் விருதுநகரை விரும்பாத டாக்டர்கள்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஓராண்டை கடந்தும் நிரந்தர நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) நியமிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் நடந்த ஆர்.எம்.ஓ., கலந்தாய்விலும் டாக்டர்கள் யாரும் விருதுநகர் அரசு மருத்துவமனையை தேர்வு செய்யாததால் அடுத்தாண்டு வரை ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாக இருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 640 படுக்கைகளுடன் திறக்கப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 2000க்கும் அதிகமான நோயாளிகள் வந்து பரிசோதனை, சிகிச்சை பெற்று செல்வதால் 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. அரசு மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகள், வளாகத்தின் கண்காணிப்பு, மருந்து, மாத்திரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தல், உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தல் உள்பட மருத்துவமனையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வது நிலைய மருத்துவரின் (ஆர்.எம்.ஓ.,) பணியாகும். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு ஜூன் மாதம் ஆர்.எம்.ஓ.,ஆக இருந்த முருகேசன் பணி ஓய்வு பெற்றார். மேலும் பொறுப்பு ஆர்.எம்.ஓ., முரளிதரன் கடந்தாண்டு ஜூலையில் மதுரை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., ஆக பதவி உயர்வு பெற்று சென்றார். இதனால் காலியாக இருந்த ஆர்.எம்.ஓ., பணியிடத்திற்கு முதலில் மாதம் ஒருவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அதன் பின் ஒருவரை மட்டும் பொறுப்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்பட மருத்துவமனை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார். அரசு மருத்துவமனைகளுக்கான ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., பணியிட கலந்தாய்வு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கியது. இந்த கலந்தாய்வின் இறுதியில் விருதுநகர் அரசு மருத்துவமனையை யாரும் தேர்வு செய்யாததால் தற்போதும் ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாகவே உள்ளது. கடந்த ஓராண்டை கடந்தும் ஆர்.எம்.ஓ., பணியிடம் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் கலந்தாய்வு மூலம் நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு யாருக்கும் விரும்பம் இல்லாததால் அடுத்தாண்டு மீண்டும் கலந்தாய்வு நடக்கும் வரை ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு ஓராண்டை கடந்தும் ஆர்.எம்.ஓ., நிரந்தரமாக நியமிக்கப்படாமல் இருப்பதால் மருத்துவமனை பணிகள் பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிரந்தர ஆர்.எம்.ஓ., நியமிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.