நேரடி ஒப்பந்த நியமனம் வேண்டாம் எம்.ஆர்.பி., தொகுப்பூதியத்தில் நியமனம் செவிலியர்கள் வலியுறுத்தல்
விருதுநகர்: மாவட்டங்கள் தோறும் சுகாதார நிலையங்களில் நேரடியாக ஒப்பந்தத்தில் செவிலியர்களை நியமிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலமாக செவிலியர்களை நியமித்தால் மட்டுமே பின் நாட்களில் பணி நிரந்தரம் செய்ய முடியும். இதனால் எம்.ஆர்.பி., மூலமாக மட்டுமே தொகுப்பூதியத்தில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களில் செவிலியர்களை நியமிக்க மாவட்டங்கள் தோறும் காலிப்பணியிடங்கள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்கள் நேரடியாக ஒப்பந்தத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலமாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு, அதன் பின் செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படும் நடைமுறை உள்ளது. மாவட்டங்களில் நேரடியாக ஒப்பந்தத்தில் செவிலியர்கள் நியமிக்கப்படும் அறிவிப்பால் பணி நிரந்தரம் என்பது இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து செவிலியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவத்துறையில் டாக்டர்கள், மருந்தாளுனர்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள் நிரந்தரமாக நியமிக்கப்படும் போது செவிலியர்களை மட்டும் ஒப்பந்தத்தில் நியமிக்கும் தமிழக அரசு மீது செவிலியர்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். எனவே மாவட்டங்கள் தோறும் ஒப்பந்தத்தில் நியமிக்கும் அறிவிப்பை திரும்ப பெற்று எம்.ஆர்.பி., மூலமாக மட்டுமே தொகுப்பூதியத்தில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என செவிலியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அரசு செவிசாய்க்காமல் இருந்தால் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளனர்.