குழம்பில் விட்டில் பூச்சி ஓட்டலை மூட உத்தரவு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி எம்.ரெட்டியபட்டியில் குழம்பில் விட்டில் பூச்சி இருந்ததால் ஓட்டலை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார். திருச்சுழி எம்.ரெட்டியபட்டியில் ஒரு ஓட்டலில் ஒருவர் சாப்பிட்ட போது, குழம்பில் விட்டில் பூச்சி இருந்ததால், அதனால் தனக்கு வாந்தி ஏற்பட்டதாக மாவட்டஉணவு பாதுகாப்புத் துறைக்கு தெரிவித்தார். திருச்சுழி உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து , ஓட்டலில் உணவு மாதிரி எடுத்தார். ஆய்வின் போது பூச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும், சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதும் தெரிந்ததால்தொடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட அலுவலருக்கு பரிந்துரைத்தார். நியமன அலுவலர் மாரியப்பன் ஓட்டலை காணொலி வாயிலாக ஆய்வு செய்து, உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார். கவனக்குறைபாடால் இது நடந்தது தெரிந்தது.ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். நியமன அலுவலர் கூறுகையில் '' விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் ஓட்டலை இயக்க அனுமதி அளிக்கப்படும்'' என்றார்.