கழிவு நீர் தேக்கமாக மாறிய ஊருணி
சிவகாசி: சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி சுப்பிரமணியபுரம் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவு நீர் தேங்கி பாசி படர்ந்துள்ள ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே ஊராம்பட்டி ஊராட்சி சுப்பிரமணியபுரம் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஊருணியில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருணி குளிக்க, துணி துவைக்க என பயன்பாட்டில் இருந்தது. மேலும் அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழையில் ஊருணிக்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்துள்ளது ஆனால் தண்ணீர் வந்து பயனில்லாமல் கழிவுநீராக பாசிப்படர்ந்து காட்சியளிக்கிறது. ஏனெனில் இப்பகுதியின் கழிவுகள் அனைத்து ஊருணியில் கலக்கின்றது. தவிர ஊருணியில் ஆங்காங்கே கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளது. மேலும் இப்பகுதி குடியிருப்புகள், கடைகளின் குப்பை ஊருணியில் தான் கொட்டப்படுகின்றது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இதனை கடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கடந்த மழை சீசனில் ஊருணி நிறைந்து கழிவுநீர் வெளியேறி சுப்பிரமணியபுரம் காலனி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததில், தனி தீவாக மாறிவிட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். எனவே ஊருணியை துார்வாரி தடுப்புச் சுவர் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.