விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் விரக்தி, சுகாதாரக்கேடு ஒப்பந்த பணியாளர்கள் நீக்கத்தால் பாதிப்பு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த பணியாளர்களின் நீக்கத்தால் வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடத்தில் ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது. கழிவறை, வளாகப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை திறக்கப்பட்ட போது 645 படுக்கை இருந்தது. ஆனால் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் செயல்படுகிறது.இங்கு துாய்மை பணி, டெக்னீசியன், உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், பிளம்பிங், எலக்ட்ரீசியன், லிப்ட் ஆப்ரேட்டர் உள்பட பல்வேறு பணியிடங்களில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால் மருத்துவமனையின் பல்வேறு பணிகள் தடையின்றி நடந்தது.ஆனால் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து புதிதாக மற்றொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 140 தொழிலாளர்கள் முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மருத்துவமனையின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு, வெளி நோயாளிகள் பிரிவு, வார்டுகளில் பணிபுரிய போதிய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதில் வார்டுகளில் பணிபுரிபவர்கள் அறுவை சிகிச்சை நோயாளிகளை இடமாற்றுதல், அவர்களுக்கு இனிமா கொடுப்பது, ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுப்பது, அதன் முடிவுகளை வாங்கி வருவது என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனால் தற்போது ஒரு பணியாளர் மூன்று வார்டுகளை சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. தற்போது படுக்கைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருப்பதால் ஒரு பணியாளர் மூன்று வார்டுகளை சேர்த்து கவனிப்பது சாத்தியமில்லாததாக உள்ளது.மருத்துவமனையில் கேட்பாரற்ற கிடந்த காலணிகளை எம்.ஆர்.ஐ., அருகே உள்ள குப்பை கிடங்கில் போட்டுள்ளனர். இங்குள்ள தகர செட்டில் சேகரிக்கப்படும் குப்பை, பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் தினசரி அள்ளுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்த கிடங்கு எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கு அருகே தொடர்ந்து செயல்படுவதால் அங்கு காத்திருக்கும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. கழிவறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. வெளி நோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடத்தில் இருந்த பணியாளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டதால் ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்கள் ஒரே வரிசையில் நீண்ட நேரம் நின்று சீட்டு பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரிசெய்து, நோயாளிகளின் நலன் காத்து, வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.