உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சிகளில் நிரந்தர துப்புரவு ஊழியர்கள் இன்றி அல்லல்: துாய்மை பணி பாதிப்பதால் சுகாதாரக்கேடு அதிகரிப்பு

ஊராட்சிகளில் நிரந்தர துப்புரவு ஊழியர்கள் இன்றி அல்லல்: துாய்மை பணி பாதிப்பதால் சுகாதாரக்கேடு அதிகரிப்பு

மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளும் 3 முதல் 10 உட்கடை கிராமங்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் டெக்ஸ்டைல்ஸ், பேண்டேஜ், அட்டை மில், அரிசி ஆலைகள், பருப்பு மில்கள், விதைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆடு கோழி பண்ணைகள் என அதிக அளவில் உள்ளன. இதனால் பல ஊராட்சி பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. வயல் காடாகவும், மேய்ச்சல் நிலமாகவும் இருந்த பல ஊராட்சிகளில் புதியதாக குடியிருப்புகள் உருவாகி வருகிறது. இதில் பூர்வீக மக்களும் நகராட்சியில் இருந்த இடம் பெயருபவர்களும் புதிய வீடுகள் கட்டி குடியேறும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் ஊராட்சிகள் தோறும் 14 முதல் 22 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். காலப்போக்கில் வயது முதிர்வால் பலர் இறந்து போன நிலையிலும் சிலர் ஓய்வு பெற்ற நிலையிலும் நிரந்தர துப்புரவு பணியிடங்கள் நிரந்தர காலியிடங்களாக உள்ளது. புதிய நகர்களில் அதிக அளவு குவியும் குப்பைகளை அகற்றவும் கழிவுநீர் செல்லும் வாறுகால்களை சுத்தம் செய்வதற்கும் பணியாளர்கள் இன்றி ஊராட்சிகள் திணறுகின்றன. தற்காலிக பணியாளர்கள் ஒரு நாள் வேலைக்கு வருவதும் மறுநாள் விடுமுறை எடுத்துக் கொள்வதுமாக உள்ளனர். எனவே ஊராட்சிகளில் காலியாக உள்ள நிரந்தர துப்புரவு பணி இடங்களை நிரப்ப வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி