விருதுநகர் வழியாக செங்கோட்டை - -தாம்பரம் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: தற்போது செங்கோட்டையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் திருநெல்வேலி, விருதுநகர், காரைக்குடி வழியாக தாம்பரத்திற்கு இயங்கும் ரயிலை திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக வழித்தடம் மாற்றி இயக்க தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தற்போது தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறுநாள் காலை 10:50 மணிக்கு வந்தடையும் வகையில் ரயில் எண்.20683 இயங்குகிறது.மறுமார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளி மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் ரயில் எண் 20684 இயங்குகிறது.இந்த ரயில் மானாமதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் அதே வழித்தடத்தில், தற்போது ராமேஸ்வரம்- தாம்பரம் தினசரி ரயில் இயக்கபட்டு வருகிறது.எனவே செங்கோட்டை- தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் (எண்.20683, 20684) ரயில்களை திருநெல்வேலியில் மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வழியாக தென்காசிக்கு வந்து அங்கிருந்து 6:00 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, மானாமதுரை, சிவகங்கை நகரங்களில் நின்று, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக தாம்பரம் செல்லும் வகையில் மாற்றி இயக்க வேண்டும்.இதனால் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட மக்களும், டெல்டா மாவட்ட மக்களும் பயனடைவர். தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும்.