புது பஸ் ஸ்டாண்டில் நுழைவு வழிகளை மாற்றி அமைக்க விருப்பம் மழை, வெயிலில் வாடும் பயணிகள்
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் நுழைவு வழிகளான இடது, வலதுபுற வாயில்களின்உள்ளே, வெளியே வரையறையை மாற்றி அமைத்து மழை, வெயிலில் வாடும் பயணிகளை பஸ் ஸ்டாண்ட் கூரை பகுதியில் நிற்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கிய நாள் முதல் மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்களை இயக்க கோரி ஒரு தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அக்டோபர் மாதத்திலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு திருமங்கலம் பஸ்கள் மட்டும் சரிவர வராமல் உள்ளன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் இடது வாயில் உள்ளே நுழைவதற்கும், வலது வாயில் பஸ் வெளியேறுவதற்கும் உள்ளது. முன்பு பஸ் ஸ்டாண்ட் செயல்பட்ட போது வலது வாயில் வழியாக தான் பஸ்கள் உள்ளே நுழைந்தன. இடது வாயில் வழியாக தான் பஸ்கள் வெளியேறின. இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்டில் இடது வாயிலில் நுழைந்து வலது பக்கம் வெளியேறுவதால் பயணிகள் மரங்களின் அடிப்பகுதியில் பஸ்களுக்கு காத்திருக்கின்றனர். இதனால் மழை வெயிலில் பாதிப்பை சந்திக்கின்றனர். 30 ஆண்டுகள் கழித்து பஸ் ஸ்டாண்ட் செயல்படும் நிலையில் தற்போது வரை முழுமையான தீர்வு கிடைக்காமல் உள்ளது.டூவீலர் நிறுத்தத்தை விரிவுப்படுத்துவது, வாரச்சந்தையை எல்லா வாரங்களிலும் இடைவிடாமல் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் உள்ளது. இது மட்டுமே புது பஸ் ஸ்டாண்டை முழுவீச்சில் செயல்படுத்த உதவும். எனவே வாயில்களின் வரையறைகளை மாற்றி மக்கள் கூரைக்கு அடிப்பகுதியில் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.