| ADDED : ஜன 21, 2024 03:03 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் புதர்மண்டி விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இங்கு வரக்கூடிய நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், நகர சுகாதார நிலையத்திற்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் பகுதிகளுக்கும், ஊரகப்பகுதிகளுக்கும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள கூந்தளப்பட்டி, சீனியாபுரம், நாராயணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இங்கு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, மகப்பேறு நடப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருசில அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீண்ட கால பிரச்னையாக இருப்பது சுற்றுச்சுவர். இதன் முன் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் சுற்றிலும் முழுவதுமாக அமைக்கப்படாமல் கம்பி வேலிகளாக மட்டும் அமைத்துள்ளனர். விளை நிலங்களுக்கு மத்தியில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருப்பதால் விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சை பெறவரும் நோயாளிகள், பரிசோதனை, பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.கொரோனா காலகட்டத்தில் கைகழுவுதற்கு காலால் மிதித்து தண்ணீர் வரும் படியான சாதனம் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதுவும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதில் தேங்கிய நீரை முறையாக அகற்றி சுத்தம் செய்யாமல் வைத்துள்ளனர். இதனால் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சிகிச்சை பெற வருபவர்கள் நோயாளிகளாக செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகளின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைத்து, புதர்மண்டிய பகுதிகளை சுத்தம் செய்து, தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.