செயலியில் தகவல் பதிவு செய்வதில் சிக்கல்
விருதுநகர்,: தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பில் செயலியில் தகவல்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் கால்நடைகள் கணக்கெடுப்பு துவங்குவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது.இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாட்டின் 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு 2019ல் நடத்தப்பட்டது. இந்தாண்டில் 21வது கணக்கெடுப்பு நடத்துவதற்காக மென்பொருள், இனவகைகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து செயலி அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் செயலியின் பயன்பாடு, இனவகைகளை பதிவு செய்தல் குறித்த பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் கணக்கெடுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.இந்நிலையில் பல மாநிலங்களில் 21வது கால்நடை கணக்கெடுப்பு செயலியில் இனவகைகளை துல்லியமாகவும், பெயர் மாற்றம் இன்றி பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சிகள் அதிகாரிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல்களை பதிவு செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தற்போது முதற் கட்ட பயிற்சிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பாளர்களுக்கான அடையாள எண், கடவுச்சொல், அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் மெதுவாக நடப்பதால் திட்டமிட்டப்படி இம்மாதம் கணக்கெடுப்பு பணிகள் துவங்காத நிலை ஏற்பட்டுள்ளது.கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது:தமிழகத்தில் கணக்கெடுப்பாளர்களுக்கு இரண்டு, மூன்றாம் கட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் செயலில் தகவல்களை பதிவு செய்யும் போது நெட்வோர்க் பிரச்னை ஏற்படுகிறது. கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும், கணக்கெடுப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. மத்திய அரசு செயலியில் ஏற்படும் சிக்கல்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இதனால் விரைவில் கணக்கெடுப்பு துவங்கப்பட்டு பணிகள் நடக்கும், என்றனர்.