| ADDED : ஜன 25, 2024 04:51 AM
விருதுநகர்: ராஜபாளையம் முகவூர் முத்துச்சாமிபுரத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்கப் பள்ளி மாணவர்கள், பெற்றோர் அப்பள்ளியை மூடுவதை எதிர்த்து விருதுநகர் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.ராஜபாளையம் முத்துச்சாமிபுரம் முகவூர் சுப்புலட்சுமி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: நான் துவக்கப்பள்ளியின் செயலாளராக இருந்து தற்போது உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக சவுந்திரராஜன் என்பவரால் தடையாணை பெற்று வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் தற்போது செயலாளராக உள்ளார். இரு தரப்பும் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.2023--24ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களை மாற்றுச்சான்று பெற்று வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும், கட்டடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். கல்வியாண்டு முடியும் வரை கால அவகாசம் கேட்டாலும் மறுக்கின்றனர். மறுபுறம் இருதரப்பு வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எனவே தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பை தொடர அனுமதித்தும், தற்போது இயங்கி வரும் பள்ளி கட்டடத்தில் இருந்து வேறு கட்டத்திற்கு பள்ளியை மாற்ற நடவடிக்கை எடுப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். மாணவர்களும், பெற்றோர்களும், படிப்பை தொடர வழிவகை செய்து இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க கோரி மனு அளித்துள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி கூறியதாவது: செயலாளரே பள்ளியை மூடி கொள்வதாக வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பள்ளியை காலி செய்ய அறிவுறுத்துகிறோம். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடுகிறோம், என்றார்.