கூடுதல் பஸ் வசதி கேட்டு மறியல்
காரியாபட்டி:காரியாபட்டி_ நரிக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமரசம் செய்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். காரியாபட்டி தேனூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் எஸ்.மறைக்குளம் பள்ளியில் படித்து வருகின்றனர். காலையில் 7:15க்கு காரியாபட்டியில் இருந்து நரிக்குடிக்கு ஒரு பஸ் உள்ளது. இதில் சிறப்பு வகுப்பு நடக்கும் மாணவர்கள் ஏறி செல்வர். அதற்குப்பின் 8:15 க்கு ஒரு பஸ் உள்ளது. கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஏறி பயணம் செய்ய முடியவில்லை. காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை கொடுக்கப்பட்டது. எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நேற்று காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் தேனூர் விலக்கில் மாணவர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அ. முக்குளம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.